கோவை: கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு வினாடிக்கு 6,500 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீரும் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பவானி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் எச்சரிக்கையாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் தொடர்ந்து அறிவுறுத்தல் விடுத்து வருகிறது. பவானி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ ஆற்றில் இறங்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.