இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், ‘பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக போலி வீடியோ வெளியாகியுள்ளது’ என, மாநில போலீஸ் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு மாநில மான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது.
இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சமீபத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை தொடர்பாக பல பொய் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஒரு பெண் கொல்லப்பட்டதாக வீடியோ வெளியானது. இது தொடர்பான விசாரணையில், இந்த வீடியோ, அண்டை நாடான மியான்மரில் நடந்தது என்பதும், அதை மணிப்பூரில் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது, மியான்மரில் இருந்து பரப்பப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், நேற்று மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இவரையும் சேர்த்து, இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்குப் பின், ‘இன்டர்நெட்’ வசதியை அரசு அளித்துள்ளது.
ஆனால், தொலைபேசி வாயிலான இணைய வசதி மட்டும் தரப்பட்டுள்ளது. மொபைல் போன் வழியான இணைய வசதி தரப்படவில்லை.
சட்டவிரோதமாக நுழைந்த 718 பேர்
மியான்மரில் இருந்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 718 பேர் மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக, மாநில உள்துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில், சண்டேல் மாவட்டத்தில், எல்லைப் பகுதி வழியாக, 718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக வந்துள்ளனர். இதில், 301 குழந்தைகளும் அடங்குவர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இவர்கள் எப்படி நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்