மும்பை: Vijay (விஜய்) ஜவான் படத்தின் சண்டை பயிற்சியாளர் கொடுத்த பேட்டியை அடுத்து ஜவானில் விஜய் நடிப்பது உறுதியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர மற்ற இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி விஜய்யுடன் அவருக்கு நல்ல கெமிஸ்ட்ரியும் உருவாகிவிட்டது.
ஹிந்தியில் அட்லீ: சூழல் இப்படி இருக்க அட்லீ தனது ஐந்தாவது படத்தையும் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து இயக்க கமிட்டாகிவிட்டார். படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன் தாரா, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதனை பார்க்கும்போது நிச்சயம் இந்தப் படம் பாலிவுட்டில் பந்தயம் அடிக்கும் என்றும்; ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அட்லீ இதன் மூலம் பாலிவுட்டுக்கு உணர்த்தியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் விஜய்?: ட்ரெய்லரின் ஹைலைட்டாக ரசிகர்கள் ஒரு விஷயத்தை நோட் செய்தனர். அதாவது ஜவான் ட்ரெய்லரில் ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜய் போலவே ஒரு உருவத்தை அனைவருமே டீகோட் செய்து படத்தில் விஜய் கேமியோ ரோல் செய்கிறாரோ என சந்தேகம் கிளப்பிவந்தனர். மேலும் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் விஜய் ஷாருக்கான் மற்றும் அட்லீயை சந்தித்தார்; அதுமட்டுமின்றி விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரியில் அட்லீ இருப்பதால் இதில் விஜய் நடித்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று ரசிகர்கள் ஆரூடம் கூறிவந்தனர்.
உறுதிப்படுத்திய பிரபலம்: இந்நிலையில் சண்டை பயிற்சியாளர் யானி பென் அளித்த சமீபத்திய பேட்டியில், “ஜவான் படத்தில் ஷாருக்கானும், விஜய்யும் ஒரு சண்டைக்காட்சியில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்தக் காட்சி நிச்சயம் ட்ரீட்டாக இருக்கும்” என கூறினார். அதன் பிறகு உஷாரான அவர் நான் விஜய் சேதுபதியைத்தான் விஜய் என்று கூறினேன் என தெரிவித்தார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ட்ரீட் இருக்குமோ: இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விஜய் நடித்திருப்பாரோ. விக்ரம் படத்தில் சூர்யா நடித்ததை லோகேஷ் கனகராஜ் எப்படி ரகசியமாக வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாரோ அதேபோல் அட்லீயும் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். அப்படி மட்டும் இருந்தால் நிச்சயம் தியேட்டர் அதிர்ந்துபோகும் என தளபதி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.