அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை தமிழ்நாடு அரசு ஒரு ஆண்டாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது. 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற வேகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாடு முழுவதும் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சிக்கிம் மாநில அரசும் மகப்பேறு விடுமுறையை ஓர் ஆண்டாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் மகப்பேறு விடுப்புக்காக பெண்களுக்கு ஒரு ஆண்டும், ஆண்களுக்கு ஒரு மாதமும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநில அரசு அதிகாரிகளின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கு முன்னதாக மகப்பேறு விடுமுறையாக பெண்களுக்கு ஆறு மாதங்கள் அளிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் தான் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு என்று பிரேம் சிங் கூறியுள்ளார். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இமயமலையை ஒட்டியுள்ள மாநிலமான சிக்கிம் நாட்டிலேயே குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். 6.32 லட்சம் பேர் தான் அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை.