இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, பிரசாரங்கள், யூகம் வகுப்பது என பரபரப்பாக களமாடி வருகின்றன. இந்தச் சூழலில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அண்மையில் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்துப் பேசியிருந்தார். அதிலிருந்து இந்தச் சட்டம் தொடர்பான விவாதங்கள் பொதுச் சமூகத்தில் `தீவிரமடைந்தன.’ பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டது. மேலும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மத அமைப்பினர் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு தரப்பினரும் இந்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
“பொது சிவில் சட்டம் நாட்டுக்கு குந்தகம் விளைவித்து, நாட்டின் பன்முகத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், பல மதங்கள் வாழும் இந்த நாட்டில் இத்தகைய சட்டம் சரிவராது” எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தீவிர எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், “பல்வேறு சமூகங்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது” எனச் சிறுபான்மை சமூகங்கள், தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
தலைநகர் டெல்லியில், பொது சிவில் சட்டம் குறித்து மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புகளின் பிரநிதிகள் ஒன்றுகூடி, விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியவர்கள், இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். இது தொடர்பாகப் பேசியவர்கள், “பாகுபாட்டை அகற்றும் போர்வையில் அவர்கள் இட ஒதுகீட்டை ரத்துசெய்வார்கள் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், பொது சிவில் சட்டம் அரசியலமைப்பு உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் சீக்கிய சமூக அமைப்புகள் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தலித், பழங்குடியின அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் எந்தவொரு நகர்வாக இருந்தாலும், அதை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்.

இந்தி, இந்து, இந்துஸ்தான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பொது சிவில் சட்டத்தை இவர்கள் பார்ப்பதால், இறுதியில் இந்தப் பொது சிவில் சட்டம் பட்டியலின சாதிகள் மற்றும் பிற பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகளை அகற்ற வழிவகுக்கும். மத்திய அரசு, பல்வேறு சமூகங்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மத நடைமுறைகளில் தலையிடக் கூடாது. ஒரே தேசம், ஒரே சட்டக் கண்ணோட்டங்கள் என்பது பல்வேறு தரப்பினரின் சமூக மற்றும் மத விவகாரங்களில் தலையிடும் தவறான முயற்சி. பொது சிவில் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சட்டப்பிரிவு 371-ன் கீழ் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசியலமைப்பு உத்தரவாதங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைச் சீர்குலைக்க முயல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறோம். மனு ஸ்மிருதியின் அடிப்படையில் இந்து ராஷ்டிராவின் கனவுத் திட்டத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம்.

இந்தி, இந்து, இந்துஸ்தான என்பதுதான் அவர்களின் முழக்கம். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கும் மத, கலாசார மற்றும் அனைத்து உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, இந்தப் பொது சிவில் சட்டத்தை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். பல்வேறுபட்ட மதங்கள், கலாசாரம், பண்பாடுகளைக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த இந்த நாட்டுக்கு பொது சிவில் சட்டம் உகந்ததல்ல” எனக் கூறினர்.