சீனாவில் நுகர்வோர் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி; ஆனால்… ஆணுறை விற்பனை உயர்வு

பீஜிங்,

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவால், அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிக குறைவாக காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

எனினும், சீனாவின் நுகர்வோர் எண்ணிக்கை அபரிமித வளர்ச்சி காணும் என்று நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அந்நிறுவனம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீன வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது என இந்த மாத பொருளாதார தரவு தெரிவிக்கின்றது. இதனால், குலைந்து போன நுகர்வோர் நம்பிக்கையை மீட்டு, அவர்களை ஊக்குவிக்க அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டு உள்ளது என்றும் இந்த தரவு தெரிவிக்கின்றது.

எனினும், நுகர்வோர் தரப்பில் வீழ்ச்சி கண்டபோதும், ஆணுறைகளின் விற்பனை அதிகரித்து உள்ளது என மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. இதுபற்றி டியூரக்ஸ் என்ற ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரெகிட் நிறுவனத்தின் சி.இ.ஓ. துரந்த் கூறும்போது, ஒட்டுமொத்தத்தில் பொருளாதார மீட்சியில் சற்று மந்தம் காணப்பட்டாலும், தம்பதியை உற்சாகமூட்டும் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்து உள்ளது.

முதலில், இந்த ஆணுறைகளுக்கு புதிய மூலப்பொருட்களை கொண்ட புதுமையான விசயங்களை புகுத்தினோம். இரண்டாவது விசயம், சீனாவில் இரவு வாழ்க்கையை மக்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதனால், அந்நிறுவனத்திற்கு கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மொத்த வருவாய் வளர்ச்சி 8.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து உள்ளது.

சீனாவில், இதுவரை இல்லாத வகையில் மிக மென்மையான ஆணுறைகளை தயாரிக்கும் திட்டம் உள்ளது என்றும், அதற்கான திட்ட பணிகள் 2026-ம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என்றும் ரெகிட் நிறுவன வலைதளம் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.