காசர்கோடு, மணிப்பூர் கலவரத்தை கண்டித்து, கேரளாவின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி நடத்திய பேரணியில், மதக் கலவரத்தை துாண்டும் விதமாக கோஷமிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து, காசர்கோடு மாவட்டத்தின் கன்னங்காடு என்ற இடத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.
அப்போது, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் சிலர் கோஷங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து, கன்னங்காடு மண்டல பா.ஜ., இளைஞர் அணி தலைவர் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய செயலர் பிரோஸ் பாபு உட்பட, 307 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவர் பணக்காடு சயித் முனாவரளி ஷிஹாப் தங்கல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”இருவேறு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல,” என, அவர்தெரிவித்தார்.
பேரணியில் கோஷமிட்ட கன்னங்காடு நகராட்சியைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவர், முஸ்லிம் லீக் இளைஞர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்