சென்னை: அண்ணாமலை நடைபயண தொடக்கவிழாவில் மரியாதை நிமித்தமாக பங்கேற்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ட்விட்டர் பக்கத்தில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.
மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். மாலை 5.45மணிக்கு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே வாஜ்பாய் திடலில் நடைபெறும் அண்ணாமலை நடைபயண தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.