பிசினஸ் தொடங்கி, அதில் நஷ்டத்தை அடைந்திருக்கும் இளம் தொழில்முனைவோரான அஜய்-க்கு (பரத்), தொழிலதிபராக ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை. தன் தந்தையின் பெருநிறுவனத்தில் வேண்டா வெறுப்பாக வேலை பார்த்து வரும் திவ்யாவுக்கு (வாணி போஜன்), தந்தையின் நிழலிலிருந்து வெளியேறி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆசை. இருவரும் ஏற்பாட்டுத் திருமணம் வாயிலாகக் காதலிலும் விழுந்து தங்களின் திருமண வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். ஒரு வருடத்துக்குப் பிறகு, அந்த வாழ்க்கை இருவருக்கும் கசப்பைத் தரத் தொடங்குகிறது. இந்நிலையில், திவ்யா கர்ப்பமாகிறார்.

அஜய்-யின் தொழிற் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதாலும், அவரின் பொறுப்பற்ற குணத்தாலும், இருவருக்கும் வாக்குவாதம் எழ, அது கைகலப்பாக மாறுகிறது. இறுதியில் கருவுற்றிருக்கும் திவ்யாவை அஜய் தள்ளிவிட, அவர் தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி மரணிக்கிறார். என்ன செய்வதென்று அறியாமல் அல்லல்படும் அஜய், திவ்யாவின் சடலத்தைத் தடையமில்லாமல் அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் திவ்யாவின் சடலம் என்ன ஆனது, பரத்துக்கு இருக்கும் பிரச்னை என்ன என்பதை எல்லாம் ‘ட்விஸ்ட்கள்’ நிறைந்த திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
மலையாள ‘லவ்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.பி.பாலா. படம் முழுவதுமே கதாநாயகன் பரத்தின் நடிப்பையே சார்ந்திருக்கிறது. ரொமான்ஸ், குற்றவுணர்வு, பதற்றம், துரோகம், நட்பின் மீதான அக்கறை என இடைவிடாது வெவ்வேறு உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், அதில் ரொமான்ஸிலும், பதற்றத்திலும் மட்டுமே கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார். திவ்யாவாக வரும் வாணி போஜன் குறைந்த அளவே வந்தாலும், அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை ‘அளவாக’ வழங்கி, தன் தேர்வுக்கு நியாயம் செய்திருக்கிறார். திவ்யா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதத்தில் இருக்கும் சில குழப்பங்களைக் களைத்திருந்தால், மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமாக மாறியிருக்கும். உதாரணமாக, ‘முன்னப்பின்ன தெரியாதவுங்க கூட எப்படி வாழ்றது?’ எனப் பேசும் கதாபாத்திரம், சில நிமிடங்களிலேயே அதே முன்பின் தெரியாதவரைத் திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொள்கிறது.
கதாநாயகனின் நண்பர்களாக விவேக் பிரசன்னாவும், டேனியல் அன்னி போப்பும் வருகிறார்கள். அதில் விவேக் பிரசன்னா ஒரு சில இடங்களில் மட்டும் சிரிப்பு மூட்டியதற்குக் கூலியாக, ஏனைய இடங்களில் தன் மீகை நடிப்பால் பாடாய்ப்படுத்துகிறார். ராதாரவி ஒரேயொரு காட்சியில் வந்தாலும், தன் அனுபவ நடிப்பால் அழுத்தமாகப் பதிகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு வீட்டிற்குள் நடக்கும் கைகலப்பு காட்சிகளுக்கு மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஒரேயொரு வீடுதான் களம் எனும்போது புதுமையான ப்ரேம்கள், ஷாட்களைக் கையாண்டு, சுவாரஸ்யத்தைக் கூட்டத் திரைக்கதைக்கு உதவியிருக்கலாம். படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் ஒவ்வொரு காட்சிகளிலும் கூடுதலாகத் துல்லியத்தையும் கண்டிப்பையும் கடைப்பிடித்து, பார்வையாளர்களிடம் பதற்றத்தைத் தொற்ற வைக்க உதவியிருக்கலாம். ஆனால் இருவருமே அந்த ஏரியாவில் ஸ்கோர் செய்யத் தவறுகின்றனர். ரோனி ரபேல் தன் பின்னணியிசையால் கவனிக்க வைக்கிறார்.
கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையிலான காதல் உரையாடலில் தொடங்குகிறது படம். அந்த உரையாடலே போலித்தனமாகவும், மிகையாகவும் இருக்கிறது. ஆனாலும், பிரதான கதாபாத்திரங்களுக்கான முன்கதைகளையும் அவர்களின் ‘காதல் டு கல்யாணம்’ கதையையும் இழுஇழுவென சொல்லாமல், நறுக்கென சில காட்சிகளிலும் ஒரு பாடலிலும் சொல்லிவிட்டு, ஒரு ‘திக்திக்’ த்ரில்லருக்கான அடித்தளத்தோடு கதைக்குள் நுழைவது ஒரு வித எதிர்பார்ப்பை வர வைக்கிறது.
ஆனால் தொடக்கக் காட்சிகளில் மட்டுமே அந்தப் பதற்றம் நம்மைக் கவனிக்க வைக்கிறது. அடுத்தடுத்து வரும் ‘காலிங் பெல்’ காட்சிகள், போலீஸ் விசாரிக்க வருவது எல்லாம் பழகிய த்ரில்லர் காட்சிகளாகவே இருக்கின்றன. நண்பராக வீட்டிற்குள் வரும் விவேக் பிரசன்னாவும் சிறிது நேரத்திலேயே ‘தொணதொண’ மோடுக்கு போய்விடுகிறார். அதன் பின்னர் படத்தின் உள்ளே வரும் புதிய கதாபாத்திரங்களும் சுவாரஸ்யத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

இரண்டாம் பாதியில் வரும் அந்த ட்விஸ்ட் அட்டகாசமாக இருந்தாலும், அதற்கு முன்பான காட்சிகளும் கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கும்படியாக எடுக்கப்படாததால், அது வெறும் ‘ட்விஸ்டாக’ மட்டுமே தனித்து நிற்கிறது. படத்தின் தொடக்கத்திலிருந்தே காட்சிகளையும் பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருந்தால், அந்த ட்விஸ்ட் உணர்வுரீதியாக ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கும். இன்னும் எத்தனை படங்களில் ‘Schizophrenia’ போன்ற மனநலப் பிரச்சினைகளைப் புரிதல் இல்லாமல் கதையில் பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. மொத்தமாகப் பார்த்தால் ஒரு குறும்படம் பார்த்த பாதிப்பை மட்டுமே படம் தருகிறது.
கணவன் – மனைவி சண்டைக்குள் த்ரில்லர் பின்னணியை இணைத்தது சுவாரஸ்யம்தான் என்றாலும் திரைக்கதை அந்த வீட்டுக்குள்ளேயே திக்கற்று திணறுவதால் இந்த `லவ்’ நம்மை ஈர்க்காமல் முடிந்துபோகிறது.