சிக்கார், ”ராஜஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதாவிடம் உள்ள சிவப்பு டைரியில், மாநில அரசின் இருண்ட செயல்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வியை சந்திக்க இது வழிவகுக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர குதா, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், சிவப்பு டைரி ஒன்றை சபையில் காட்டினார்.
அதில், முதல்வர் அசோக் கெலாட்டின் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்று இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார். இது, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியது.
இந்நிலையில், ராஜஸ்தானின் சிக்கார் மாவட்டத்துக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.
அதன் பின், பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, ‘இந்திரா தான் இந்தியா; இந்தியா தான் இந்திரா’ என்ற கோஷத்தை காங்கிரஸ் முன்வைத்தது.
ஆனால் இன்றைக்கு, ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் இந்தியா; இந்தியா தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ என கூறும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது.
காங்கிரஸ் எனும் கொள்ளை கடையின் புதிய பண்டம் தான் இந்த சிவப்பு டைரி. அவர்களின் இருண்ட செயல்கள் அனைத்தும் அதில் பதிவாகி உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ, இந்த டைரி வழிவகுக்கும்.
இந்த மாநில இளைஞர்களின் கனவுகள் பூர்த்தியாக வேண்டுமெனில், காங்கிரஸ் நீக்கப்பட வேண்டும். ‘ராஜஸ்தான் பொறுத்துக் கொள்ளாது’ என்பதே இந்த முறை மக்களின் முழக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் பங்கேற்ற விழாவில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மாநில அரசு நிகழ்ச்சி ஒன்றில் அசோக் கெலாட் நேற்று பேசியது, பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பது போல் அமைந்தது.
அவர் பேசியதாவது:
சிவப்பு டைரி என்பதே ஒரு கற்பனை; அப்படி எதுவும் இல்லை. சிவப்பு டைரியை பார்க்க முடிந்த பிரதமர் மோடியால், சிவப்பு நிற எரிவாயு சிலிண்டர்கள், சிவப்பு நிற தக்காளியின் விலை உயர்வை பார்க்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் நிகழ்ச்சியை புறக்கணித்த முதல்வர்!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் இன்று ராஜஸ்தான் வருகிறீர்கள். நீங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், முன்பே திட்டமிடப்பட்ட என்னுடைய மூன்று நிமிட பேச்சு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, என்னுடைய பேச்சின் வாயிலாக உங்களை என்னால் வரவேற்க இயலாமல் போனது. ஆனாலும், இந்த சமூக வலைதள பதிவின் வாயிலாக உங்களை மனதார வரவேற்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இதற்கு, பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதில் பதிவு: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் நெறிமுறைப்படி, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நீங்கள் பேசுவதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், உங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என, உங்கள் அலுவலகம் தகவல் தெரிவித்தது. ஆனாலும், நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என மனதார வரவேற்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்