புதுடில்லி:இளம்பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பட்டப்பகலில் டில்லியில் நடந்த இந்தக் கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டில்லி மாளவியா நகர் அரவிந்தர் கல்லூரி அருகே, விஜய் மண்டல் பூங்காவில், நேற்று மதியம், 12:00 மணிக்கு 22 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவல் அறிந்து, மாநகர போலீஸ் தெற்கு மண்டல துணை கமிஷனர் சந்தன் சவுத்ரி தலைமையில் போலீசார் வந்தனர்.
தலையில் ரத்தம், உறைந்த நிலையில் கிடந்த பெண் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அருகே ரத்தக் கறையுடன் கிடந்த இரும்புக் கம்பி உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றினர்.
அந்தப் பெண்ணுடன் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த வாலிபர், கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து, துணை கமிஷனர் சந்தன் சவுத்ரி கூறியதாவது:
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்காவில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் கல்லுாரி மாணவி. காதலன் இர்பான், 28, என்பவருடன் பூங்காவுக்கு வந்துள்ளார்.
உறவினரான இருவரும் காதலித்துள்ளனர். ஆனால், இர்பான் டெலிவரி பாயாக இருந்ததால், பெண் வீட்டார் இந்தக் காதலை ஏற்கவில்லை, அந்தப் பெண், இர்பானுடன் பேசுவதை தவிர்த்தார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த இர்பான், பூங்காவில் நடந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரத்தில் கொலை செய்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று மட்டும் இரண்டு!
டில்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், “தலைநகர் டில்லியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று மட்டும் இரு சம்பவங்கள் நடந்துள்ளன.- டாப்ரியில் ஒரு சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளா ர். அரவிந்தர் கல்லுாரி அருகே இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.
துாக்கில் போடுங்கள்!
கொலையான பெண்ணின் தந்தை, “என் ஒரே மகளை கொலை செய்தவனை துாக்கில் போடுங்கள்,” என ஆவேசமாக கூறி, கண்ணீர் விட்டு கதறியது பரிதாபமாக இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்