மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த விவகாரத்தில் 8 நாட்களுக்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும் என எச்சரித்திருந்தார். இதனை பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி விமர்சித்தாக தெரிகிறது.
மணிப்பூர் விவகாரம் தொடரபான விவாத நிகழ்ச்சில் பங்கேற்ற எழுத்தாளரும் மேடைப் பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும் என்றும் அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெரம்பலூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரியை சென்னையில் கைது செய்துள்ளது. அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்ரி சேஷாத்தியின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே இந்த அரசு நம்பி இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முதல் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடை பயணத்தை பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.