கோழிக்கோடு: கேரளாவில் துப்புரவு தொழில் செய்யும் 11 பெண்கள் சேர்ந்து ரூ.250-க்கு வாங்கிய மழைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.10 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநில அரசு நகராட்சி அளவில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேகரிக்க ‘ஹரிதா கர்மா சேனா’ (எச்கேஎஸ்) என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பில் ஏழை பெண்கள் சேர்ந்து குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து அவற்றை குறிப்பிட்ட மையங்களில் கொண்டு சேர்க்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் சிறிய வருவாயில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மலப்புரத்தில் பரப்பனகடி மாநகராட்சி பகுதியில் எச்கேஎஸ் அமைப்பில் மொத்தம் 57 பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பார்வதி, லீலா, ராதா, ஷீஜா, சந்திரிகா, பிந்து, கார்த்தியாயினி, ஷோபா, பேபி, குட்டிமாலு, லட்சுமி ஆகிய 11 பெண்கள் சேர்ந்து கேரள மாநில அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினர். அந்த டிக்கெட்டின் விலை ரூ.250. இதற்காக 9 பேர் ரூ.25 வழங்கி உள்ளனர். ஆனால், பேபி மற்றும் குட்டிமாலு ஆகிய 2 பேரால் அந்த ரூ.25-ஐ கூட கொடுக்க முடியாத சூழ்நிலை. அதனால், தலா ரூ.12.5 கொடுத்துள்ளனர். 11 பேரும் சேர்ந்து ஒரு டிக்கெட்டை வாங்கி உள்ளனர். பம்பர் லாட்டரி முடிவுகள் வெளியானது.
இதுகுறித்து பரப்பனகடியை சேர்ந்த பார்வதி கூறியதாவது: நாங்கள் எல்லாம் பணம் போட்டு லாட்டரி டிக்கெட் வாங்குவோம். தற்போது 4-வது முறையாக டிக்கெட் வாங்கினோம். ஆனால், முதல் பரிசு விழுந்த டிக்கெட் பாலக்காடில் விற்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனால், டிக்கெட் வாங்கி செலவழித்த ரூ.250 நஷ்டம் என்று நினைத்தேன். அந்த நினைப்பிலேயே வீட்டுக்கு சென்றேன். அங்கு எனது மகன், லாட்டரி டிக்கெட் ஏதாவது வாங்கினீர்களா என்று கேட்டான். ஒருவர் போன் செய்தார். அந்த டிக்கெட்டுக்கு முதல் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்தார் என்று எனது மகன் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வாறு பார்வதி கூறினார்.
முதல் பரிசுக்குரிய லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்கள் கூறும்போது, ‘‘புதிதாக வீடுகள் கட்டுவோம். குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவோம். கடனை அடைப்போம்’’ என்றனர். எனினும், தொடர்ந்து எச்கேஎஸ் அமைப்பில் சேவை செய்வோம் என்று உறுதியாக தெரிவித்தனர். இந்த 11 பெண்களும் மிகவும் ஏழ்மையான நிலையிலேயே இருக்கின்றனர். போக்குவரத்து செலவை மிச்சப்படுத்த சிலர் வீட்டில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு வேலைக்காக நடந்தே சென்று வருகின்றனர்.
முதல் பரிசு கிடைத்த லாட்டரி டிக்கெட்டை பரப்பனகடியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 பெண்களும் டெபாசிட் செய்துள்ளனர். பரப்பனகடி நகராட்சி தலைவர் உஸ்மான் கூறும்போது, ‘‘எச்கேஎஸ் அமைப்பில் அந்த 11 பெண்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்பவர்கள். மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்தப் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக நல்ல விஷயம் நடந்துள்ளது’’ என்றார்.