சென்னை: Meena (மீனா) அவ்வை சண்முகி படத்தில் முத்த காட்சிக்கு ரெடியாகும்படி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்னதும் தனது தாயிடம் மீனா அழுதிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.
இரு துருவங்களுடன்: இதனையடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் மீனா. குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த எஜமான், முத்து, வீரா போன்ற படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதேபோல் கமலுடன் அவர் அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தேவர் மகனில் கூட ரேவதி ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா கமிட்டாகி ஒரு ஷெட்யூல் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வை சண்முகி: கமலுடன் நடித்த படங்களில் அவ்வை சண்முகி படம் மெகா ஹிட்டானது. அதில் கமல் லேடி கெட்டப்பில் தோன்றி மெர்சல் செய்ய மறுபக்கம் மீனா தனது சிறந்த நடிப்பால் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இந்தச் சூழலில் அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முத்தக் காட்சிக்கு ரெடி ஆகுங்கள் என சொன்னவுடன் மீனா அவரது தாயிடம் அழுததாக தெரிவித்திருக்கிறார்.
மீனா பேட்டி: இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கமல் ஹாசன் படம் என்றதும் அவர் பெரிய லெஜெண்ட் என்றுதான் எனது நினைவுக்கு வந்தது. அதனால்தான் நடிக்கவும் ஒத்துக்கொண்டேன். கிஸ் சீன் பற்றியெல்லாம் எனது நியாபகத்திலேயே இல்லை. படத்தின் ஒரு சீன் எடுத்தார்.

கிஸ் சீன்: அதாவது கமல் ஹாசன் வந்து எனக்கு கிஸ் கொடுப்பது போன்ற சீன் அது. உடனே நான் அச்சச்சோ இதை நான் யோசிக்கவே இல்லையே என நினைத்துக்கொண்டு எனது அம்மாவிடம் சென்று, மீனா அப்படி பண்ணமாட்டா என்று டைரக்டர்ட்ட நீங்களே சொல்லுங்கள் என்று கூறி அழுதேன். அந்த சமயத்தில் ஷாட் ரெடி என இயக்குநர் குரல் கொடுத்துவிட்டார்.
நல்லவேளை இல்ல: அதனையடுத்து பதறிப்போய் நான் நின்றவுடன் இங்கே படுங்கள் என்று சொன்னார். தொடர்ந்து கமல் ஹாசனிடம் நீங்கள் கிஸ் கொடுப்பது போல் பக்கத்தில் செல்ல வேண்டும். அதனையடுத்து இப்போது வேண்டாமே என சொல்லும்படி காட்சி என்றார். அதனையடுத்து கமலும் நெருங்கி வந்து இப்போது வேண்டாமே என சொன்னார். டேக் ஓகே ஆனதும் துள்ளி குதித்து எழுந்துவிட்டேன். ஒருவேளை கிஸ் சீன் எடுத்திருந்தால் அதற்கு முன்னதாகவே இயக்குநரிடம் நானே முடியாது என்று சொல்ல நினைத்திருந்தேன்” என்று மீனா கூறினார்.