ஓடிடி படங்கள், தொடர்களுக்கு தணிக்கை : மத்திய அரசை அணுக கோர்ட் ஆலோசனை

திரைப்படங்களுக்கு நிகராக ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தியேட்டர்களில் வெளியாகும் படங்கள்கூட ஓடிடி தளத்தில் 60 நாட்களுக்குள் வெளியாகிறது. தியேட்டரில் வெளியாகும்போது நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகிறது. இதுதவிர ஓடிடிக்கென்று தயாராகும் படங்கள், தொடர்களில் ஆபாச காட்சிகள் கணிசமாக இடம்பெறுகிறது. ஆபாச வசனங்களும் இடம் பெறுகிறது. இதற்காகவே ஓடிடிக்கு செல்லும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

திரைப்படங்கள் போன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கும் தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓடிடி படங்கள், தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இன்றைய காலக்கட்டத்தில் ஓடிடி தளங்கள் முக்கிய பொழுதுபோக்கு வழியாக மாறி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்களும், திரைப்படங்களும் வெளியாகின்றன. தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களை கண்காணிக்கவோ, தணிக்கை செய்யவோ எந்தவொரு அமைப்பும் இல்லை.

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள், மொழிமாற்றம் செய்யப்படும் வெப் தொடர்களில் வரும் உரையாடல்கள் ஆபாசம் நிறைந்தவையாக, அருவருக்கத்தக்க காட்சிகளுடன் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் வகையில் உள்ளன. எனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களை கண்காணித்து, தணிக்கை செய்த பிறகே வெளியிட அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களை கேட்டபிறகு, “இந்த வழக்கு பொதுப்படையாக தொடரப்பட்டுள்ளது. எந்த வெப் தொடர் அல்லது எந்த திரைப்படத்தில் இதுபோன்ற காட்சிகள் உள்ளன என்பதை மனுவில் குறிப்பிடவில்லை. எனவே, மனுதாரர் இதுதொடர்பாக மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையாக மனுவை அளித்து நிவாரணம் கேட்டு முறையிடலாம்” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.