பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய், திடீரென தற்கொலை செய்திருப்பது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நிதின் தேசாய் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு வாய்ஸ் மேசேஜ்களை விட்டுச்சென்றிருக்கிறார். அதில் தனது தற்கொலைக்கு 4 தொழிலதிபர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஏற்கெனவே நிதின் தேசாய் ரூ.252 கோடி கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அவருக்கு மும்பைக்கு அருகில் கர்ஜத் என்ற இடத்தில் சொந்தமாக ஸ்டுடியோ இருக்கிறது.

அந்த ஸ்டுடியோவில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். நாளை அவரது ஸ்டுடியோவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நிதின் தேசாய் தனது ஸ்டுடியோவை மிகவும் நேசித்தார். எனவேதான், தனது இறுதிச்சடங்கு தனது ஸ்டுடியோவில் நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவரின் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கு முந்தைய தினம் இரவு நிதின் தேசாய் தனது உதவியாளர் யோகேஷ் என்பவருக்கு போன் செய்து, `என்னுடைய பங்களா பக்கம் யாரையும் விடவேண்டாம். என்னுடைய ரெக்கார்டரில் சிலவற்றை சொந்த சத்தத்தில் பதிவுசெய்கிறேன். அதை என்னுடைய சகோதரிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நேற்று காலை யோகேஷ் வழக்கமாகச் செல்லும் ஸ்டுடியோவுக்குச் சென்று நிதின் தேசாயை எழுப்பச் சென்றார். ஆனால் அங்கு அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அவர் தற்கொலை செய்த கயிற்றை இரண்டு மாதங்களுக்கு முன்பே அதில் போட்டு வைத்திருந்ததாக ஸ்டுடியோவில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நிதின் தேசாயை பாலிவுட்டில் சிலர் திட்டமிட்டுப் புறக்கணித்து வந்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்து கர்ஜத் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ஜிதேந்திர பாட்டீல், “நிதின் தேசாய் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். சிலர் தன்னை திட்டமிட்டுப் புறக்கணிப்பதாக என்னிடம் அடிக்கடி தெரிவித்தார். அது குறித்தும் போலீஸார் விசாரிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.