மூணாறு:கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வெகுவாக குறைந்த நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தாண்டு சற்று காலதாமதமாக ஜூன் 8ல் பருவ மழை துவங்கி அந்த மாதம் பொய்த்தது. அப்போது சராசரி மழை 648.3 மி.மீ. பதிவாகும் என்றபோதும் 200 மி.மீ. மழை பெய்தது. அது 60 சதவீதம் குறைவாகும். ஜூலையில் 2 முதல் 8 வரை, 22 முதல் 25 வரை என இரண்டு கட்டங்களாக பலத்த மழை பெய்தது. மாநிலத்தில் ஜூன் 1முதல் ஜூலை 31 வரை சராசரி மழை 1301.7 மி.மீ. பதிவாகும். இந்தாண்டு அதே கால அளவில் 852 மி.மீ. மழை பெய்தது.
குறைவு
மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை குறைவாக பதிவானது. இடுக்கி 52, வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் தலா 48 சதவீதம் என குறைவாக பதிவானது. அதை விட மிகவும் குறைவாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் சராசரி 339.2, பாலக்காடு மாவட்டத்தில் 596.5 மி.மீ. மழை பதிவானது.
கூடுதல்
சில மாவட்டங்களில் மழை சற்று கூடுதல் என்றபோதும் சராசரி அளவை விட குறைவாக பெய்தது. காசர்கோடு மாவட்டத்தில் சராசரி மழை 1948.1 மி.மீ. என்றபோதும் 1602.5 மி.மீ. மழை பெய்தது. இது 18 சதவீதம் குறைவாகும். கண்ணூர் மாவட்டத்தில் 1436.6 மி.மீ. மழை பெய்தபோதும் அது சராசரி அளவை விட 20 சதவீதம் குறைவாகும்.
ஜூனில் பொய்த்த மழை ஜூலையில் கை கொடுத்தபோதும் சராசரி அளவை விட குறைவாக பதிவானது. ஜூலையில் சராசரி மழை 653.5 மி.மீ. மழை பெய்ய வேண்டும். 592 மி.மீ. மழை பதிவானது. அது 9 சதவீதம் குறைவாகும்.
நீர்மட்டம் குறைவு
இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான இடுக்கி அணையின் (உயரம் 554 அடி) நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை வெகுவாக குறைந்தது. கடந்தாண்டு ஜூலை 31 வரை 1642 மி.மீ. மழை பெய்த நிலையில், அதே கால அளவில் இந்தாண்டு 1277 மி.மீ. மழை பதிவானது. அது 365 மி.மீ. குறைவாகும். கடந்தாண்டு இதே கால அளவில் அணையின் நீர்மட்டம் 367.08 அடியாக இருந்தது. தற்போது நீர் மட்டம் 176.72 அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழை கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இந்நிலையில் வரும் இரண்டு மாதங்களுக்கு சராசரி அளவை விட மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement