பாஜக யாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சம் – கே.பி.ராமலிங்கம்

தருமபுரி: பாஜகவின் பாதயாத்திரையைக் கண்டு திமுகவினர் அச்சமடைந்திருப்பதாக தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் பாரத மாதா நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த ஆலயத்தில் அனுமதியின்றி பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றதாக பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கே.பி.ராமலிங்கம் நேற்று பென்னாகரம் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியா முழுவதிலும் உள்ள 508 ரயில் நிலையங்கள் நவீன தரத்துக்கு உயர்த்தப்படும் எனக் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இப்பணிகள், வரும் 6-ம் தேதி பிரதமரால் காணொலி முறையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள திருப்பூர், கரூர், போத்தனூர், சேலம் உட்பட 18 ரயில் நிலையங்களும் அடங்கும். இந்தியாவில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை புதுப்பித்த வரலாறு இதுவரை இல்லை. முதல்முறையாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க செயல் மேற்கொள்ளப்பட உள்ளது.

‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 8,9,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிகழ்ச்சியைக் கண்டு திமுக-வினர் அச்சமடைந்துள்ளனர். மறைந்த திமுக தலைவர் அண்ணா காலத்தில் அவருக்கு இருந்தது போன்ற வரவேற்பு வழிநெடுக அண்ணாமலைக்கு தற்போதைய யாத்திரையில் கிடைத்து வருகிறது.

எளிய மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடங்கப்பட்ட திமுக தற்போது செந்தில் பாலாஜிக்கு நீதி கிடைக்க வேண்டும் என செயல்படுவதாக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். பாத யாத்திரை மேற்கொண்டிருக்கும் அண்ணாமலையிடம் பொதுமக்கள் இதையெல்லாம் புகாராகக் கூறி வருகின்றனர். திமுக ஆட்சியை பாஜக-வால் மட்டும் தான் அகற்ற முடியும் என மக்களுக்கு தெரிந்துவிட்டது.

பாரத மாதா ஆலயம் என பெயரிடுவதற்கு மாறாக நினைவாலயம் என பெயரிட்டுள்ள திமுக, தான் செய்த இந்த தவறை மறைக்க எங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. தேசியத்தையும், ஆன்மீகத்தையும் நேசிக்கும் பாஜக-வினர் இதுபோன்ற வழக்குகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ‘தேசம் காப்போம், தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்ற லட்சியத்துக்கு எத்தனை தடைகள் ஏற்படுத்தினாலும் பாஜக இலக்கை அடையும். இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.