மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி… 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசிய விவகாரம், 2024 மக்களவை தேர்தல் வரை தொடரும் போல தெரிந்தது. தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டே இருந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தூசு தட்டப்பட்டு விறுவிறு விசாரணை, அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, எம்.பி பதவி பறிப்பு, அரசு பங்களாவில் இருந்து காலி, சூரத் நீதிமன்றத்தில் முறையீடு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் கணக்கு என அதிரடியான சம்பவங்கள் அரங்கேறின.

ராகுல் காந்திக்கு தண்டனை

ஆனால் எங்குமே ராகுல் காந்திக்கு சாதகமான தீர்ப்பு வெளிவரவில்லை. 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்து விடுவார். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் பின்னடைவாக அமையும். ஏன் அடுத்த பிரதமர் வேட்பாளராக கூட ராகுல் காந்தி வருவதற்கு வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இவை அனைத்தும் ஒற்றை தீர்ப்பால் அடிபடும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த வழக்கில், அதிரடியாக ஒரு உத்தரவு சற்றுமுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொகுதி மக்கள் பாதிப்பு

மேலும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. பொது வாழ்வில் உள்ளவர்கள் தாங்கள் கருத்து தெரிவிக்கும் மிகவும் எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் அவரது தொகுதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தண்டனை நிறுத்திவைப்பு

ராகுல் காந்தி வழக்கை அவரது தொகுதி மக்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டது குறிப்பிடத்தக்கது. தனது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சமீபத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல்

இந்நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரது எம்.பி பதவி பறிக்கப்படவில்லை என்றாகிறது. எனவே நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கலாம். வரும் 8ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பும், விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் ராகுல் காந்தி பங்கேற்பார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவும், பாஜகவிற்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.