யுபிஎஸ்சி மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை… தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பெறுவது எப்படி?

மத்திய அரசின் குடிமைப் பணிகளில் தமிழக மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெறும் வகையில் அவர்களை தயார்படுத்த தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி மாதம்தோறும் 7500 ரூபாய் என 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான மதிப்பீட்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெறுவது எப்படி என்பது குறித்தும் அதன் சிறப்பம்சம் குறித்தும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன் திட்டம், குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும்மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7,500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்க குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும்

தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச வயது 21 என்றும் பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 32 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சீர்மரபினருக்கும் அதிகபட்சவயது 35 என்றும், பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அதிகபட்ச வயது 37 என்றும் மாற்றுத்திறனாளிகள் 42 வயதைக் கடந்திருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின்அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வுசெய்யப்பட உள்ள 1,000 மாணவர்களில் 21-22 வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டப்படிப்பின் போதே, போட்டித் தேர்வுக்குத் தயாராகும்

மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகப் பெரிய பயனளிக்கும் என்றும் மருத்துவம், கால்நடை அறிவியல்

மற்றும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சலுகை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அது குறித்து திறன் மேம்பாட்டுக் கழகமே முடிவுசெய்யும் என்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு

https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கக் கடைசி நாள் வரும் 17 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறவுள்ளது என்றும் சரியான விடைகளைத் தேர்வுசெய்யும் வகையில் 150 கேள்விகளைக் கொண்டதாக இத்தேர்வு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும் 50 கேள்விகள் சி-சாட் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான திறனறிவு பிரிவிலிருந்தும் கேட்கப்படும் என்றும் தவறான கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது என்றும் வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்றும் இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் 1,000 மாணவர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும் என்றும் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்தப் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.