டொரன்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோபி கிரிகோரி ஆகியோர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக, கூட்டாக நேற்று அறிவித்தனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக, 2015 முதல் பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ, 51. இவர், தன் சிறு வயது தோழியான சோபி கிரிகோரி, 48, என்பவரை காதலித்து, 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
சோபி, ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, சேவியர், 15, எலா கிரேஸ், 14, ஹாட்ரியன், 9, என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். கனடாவின் ஒடாவா நகரில் வசித்து வரும் ட்ரூடோ தம்பதியினர், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் நேற்று தனித்தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், ‘எங்களின், 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. பல்வேறு அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்கு பின் இந்த முடிவை இருவரும் சேர்ந்து கூட்டாக எடுத்துள்ளோம்.
‘எப்போதும் போல, ஆழ்ந்த அன்பும், பரஸ்பர மரியாதையும் கொண்ட நெருங்கிய குடும்பமாக நாங்கள் இருப்போம்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் சட்டரீதியான விவகாரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ஜஸ்டின் ட்ரூடோ தற்போது வசித்து வரும், ஒட்டாவாவில் உள்ள ரீடோ காட்டேஜ் இல்லத்தில் தொடர்ந்து வசிப்பார் என்றும், அவரது மூன்று பிள்ளைகளும் அவருடன் வசிப்பர் என்றும் கூறப்பட்டள்ளது.
ஒட்டாவா நகரில் வேறு இல்லத்துக்கு குடிபெயர்ந்துள்ள சோபி, அவ்வப்போது ரீடோ காட்டேஜ் இல்லத்துக்கு வந்த தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரிந்த மனைவி சோபி மற்றும் பிள்ளைகளுடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த வாரம் விடுமுறையை செலவிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்