Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதிய COVID-19 மாறுபாடு இங்கிலாந்து முழுவதும் பரவி வருகிறது. இங்கிலாந்தின் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) ஆல் அறிவிக்கப்பட்ட ஒமிக்ரானின் துணை மாறுபாடான இது, இப்போது இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகக் கூறபடுகிறது. கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் இதற்கு அளிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கோவிட் மாறுபாடுகளைவிட எரிஸ் மிகவும் ஆபத்தானது அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே நேரம் கடந்த ஜூலை 2-வது வாரத்தில் மட்டும் 11.8% எரிஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மோசமான காலநிலையும், குறையும் நோய் எதிர்ப்பு சக்தியுமே வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக யூகிக்கப்பட்டுள்ளது. இது தவிர பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதும் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
எரிஸ் வைரஸ் பரவலால் தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற பொதுவான அறிகுறிகள்தான் தென்படுகின்றன. இங்கிலாந்தில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் புதிய வைரஸ் மேலும் பரவாமல் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

“இந்த வாரம் அறிக்கையில், கோவிட் – 19 எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். வயதானவர்களிடம் தான் பெரும்பாலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த விகிதங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என UKHSA -ன் நோய்த்தடுப்புத் தலைவர் டாக்டர் மேரி ராம்சே கூறியுள்ளார்.