புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி, பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறும்போது, ‘‘உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வருவதுபோல் ஹரியாணாவிலும் புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார்.
இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நூ நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் டாரு என்ற இடத்தில் வசித்த புலம்பெயர்ந்த குடும்பங்களின் சுமார் 250 குடிசைகள் நேற்று முன்தினம் மாலையில் இடித்து அகற்றப்பட்டன. இது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கை மட்டுமின்றி, கலவரக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.
நூ மாவட்டத்தில் உள்ள டாரு நகரில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் (ஏற்கெனவே அசாமில் வசித்தவர்கள்) சுமார் 1 ஏக்கர் அரசு நிலத்தில் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையின் பலத்த பாதுகாப்புடன் இந்த குடிசைகள் இடித்து அகற்றப்பட்டன. பல்வேறு துறை அதிகாரிகளும் அப்போது அங்கு இருந்தனர்.