செந்தில் பாலாஜி வீட்டில் சிக்கியவை என்ன? அமைச்சரை சமஉ ஆக சுருக்கிய அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மே 13ஆம் தேதி சோதனை நடத்தியது. அப்போதே அவரிடம் விசாரணை நடத்தி மே 14 அதிகாலை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்த உள்ளது.

திமுகவை சேர்ந்த 15 நபர்கள் கரூர் முதல் அமர்வு நீதிமன்றம் முன்பு ஆஜர்

அந்த விசாரணைக்கு முன்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களை குறி வைத்து கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெறுகிறது. அந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விவரங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்டவை குறித்து அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஆகஸ்ட் 3ஆம் தேதி 9 இடங்களில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் 22 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள், விளக்கம் அளிக்கப்படாத 60 நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடரும் நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவியும் வலியுறுத்தி வருகிறார். ஆனால் அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடாமல் சட்டமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடுவது கவனம் பெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.