நாக்பூர்: மும்பை உயர் நீதிமன்றத்தின் கிளை நாக்பூரில் செயல்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி ரோகித் தியோ, தனது அறையில் வழக்குகளை விசாரிக்க வந்தார். அப்போது, திடீரென தனது ராஜினாமாவை அறிவித்தார். அதனால் அங்கிருந்த வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்பாக வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நீதிபதி ரோகித் தியோ கூறும்போது, ‘‘தனிப்பட்ட காரணங்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்தக் காரணத்துக்காகவும் எனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டேன்’’ என்றார்.
மன்னிக்க வேண்டும்: பின்னர் அவர் வழக்கறிஞர்களைப் பார்த்து கூறியதாவது: இந்த நீதிமன்ற அறையில் உள்ள உங்கள் அனைவரிடமும் நான் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களை நான் பல முறை கடுமையாகப் பேசியிருக்கிறேன். நீங்கள் முன்னேற வேண்டும். இன்னும் திறமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவ்வாறு நடந்து கொண்டேன். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர் போல என்று நினைப்பேன். நீங்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ரோகித் தியோ கூறினார்.
நீதிபதி ரோகித் தியோ ராஜினாமா செய்வதாக அறிவித் ததால், அன்றைய தினம் அவர் விசாரிக்க இருந்த வழக்குகள் விடுவிக்கப்பட்டன.
கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்டிர அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார் நீதிபதி ரோகித் தியோ. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2025 டிசம்பர் வரையில் உள்ளது. அதற்குள் அவர் பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் எதற்காக திடீரென பதவியை ராஜினாமா செய்தார் என்ற விவரம் வெளியாகவில்லை.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது, சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து கடந்த 2022-ம் ஆண்டு நீதிபதி ரோகித் தியோ தீர்ப்பளித்தார்.
எனினும், அந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன், வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.