கோவை: கருணாநிதி குறித்து பேச வேண்டுமென்றால் நான் நாள் முழுக்க பேசிக்கொண்டே இருப்பேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கோவையில் இன்று (ஆக.7) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குஷ்பு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதி எனது ஆசான் என்று சொல்லிக்கொள்ளவதில் நான் பெருமைப்படுகிறேன். அவர் குறித்து பேச வேண்டுமென்றால், நான் நாள் முழுக்க பேசிக்கொண்டே இருப்பேன். திமுகவில் இருந்து வந்தவள் நான். அதனால் அவர் குறித்து நன்றாகவே எனக்குத் தெரியும். கைத்தறியை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும். அது நமது கலாச்சாரத்திலேயே உள்ளது. ஆடையை இப்படித்தான் அணிய வேண்டும். இப்படி அணியக்கூடாது என யாரும் சொல்லவில்லை.
ஆடை சுதந்திரம் இருக்கலாம். ஆனால், நமக்கு எல்லை எது என்பது தெரியும். அந்த எல்லையை மீறி சென்றுவிட வேண்டாம். இல்லையெனில், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். மனிதர்களுக்கு ஆறாவது அறிவு என்று உள்ளது. எல்லை தெரிந்து ஆடை அணிய வேண்டும். மேற்கத்திய உடைகளை அணிய வேண்டாம் என்று யாரையும் நான் சொல்லவில்லை. ஆனால், நமது கலாச்சாரத்தை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.