கோயில்களில் தரிசனம்; புலியாட்டம் ஆடிய சிறுவனுக்கு சாக்லெட் – குடியரசுத் தலைவர் புதுச்சேரி விசிட்

புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தை சுற்றப்பார்த்த அவர் புலியாட்டம் ஆடிய சிறுவனுக்கு சாக்கெட் வழங்கினார்.

புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வருகை தந்தார். ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மாலையில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழுங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயிலின் உள்ளே சென்ற குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் செய்தார். அவருடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். குடியரசுத் தலைவர் வருகையால் மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் இருந்த சாலையோரக் கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்துக்கு குடியரசுத் தலைவர் சென்றார். அவருக்கு பொம்மலாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து மற்றும் கேரள செண்டை மேளம், நாதஸ்வரம் ஆகிவையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குடியரசுத் தலைவர் கைவினைக் கிராமம் வளாகத்தில் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட சுடுமண் சிலை, காகிதத்தில் வடிவமைத்த உருவங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். புலியாட்டம் ஆடிய சிறுவனை வரவழைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் சிறுவனுக்கு சாக்லெட் வழங்கினார். அவருடன் ஆளுநர், முதல்வரும் உடன் சென்றனர்.

இதைத்தொடர்ந்து வில்லியனூர் அருகே காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கங்கைவராத நதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்: குடியரசுத் தலைவர் வருகையால் புதுச்சேரின் பலப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரங்களுக்கு பல சாலைகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.