புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் ஒரு தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இதில் அவர், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தர்மபுரி தொகுதி எம்.பி.யான செந்தில்குமார் தாக்கல் செய்த தனிநபர் மசோதாவில் கூறியிருப்பதாவது: சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்திய மருத்துவ சங்கம் நடத்திய ஓர் ஆய்வில், 75 சதவிகிதத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் ஏதோவொரு வகையான வன்முறையை தினம்தோறும் எதிர்கொண்டு வருகின்றனர். இது உடல் ரீதியானது தாக்குதல் மட்டுமல்லாமல் வார்த்தைகளாலும் கொச்சைப்படுத்தப்படுகின்றனர். மேலும், மருத்துவமனை சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
ஏற்கெனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு ஏற்படும் சேதங்களை தடுப்பதற்கு தேவையான குறிப்பீடுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கான தண்டனை மற்றும் தண்டனைகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் இதுபோன்ற வன்முறைகள் ஏற்படும்பொழுது, அதற்கு தேவையான அடிப்படைக் காரணங்களை ஆய்வு செய்வது அவசியம். பிறகு, அதை நிவர்த்தி செய்யும் வரையில் இதற்கான தீர்வு முழுவதுமாக எட்டப்படாது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது ஏற்படும் தாக்குதலுக்கு முக்கியமான காரணம், நீண்ட கால காத்திருப்பு மற்றும் நோயாளிகள் மீது மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதே.
இது, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் தெரிவிக்கும் முக்கிய அடிப்படை காரணமாகும். மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் நீண்ட காத்திருப்பு காலத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவர்கள் அவர்களது பயிற்சி காலத்தில் இதனை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் குறைகளை இரண்டையும் ஒரு சேர ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மசோதாவை அமலாக்குவதன் மூலம், மருத்துவர்கள் மீது ஏற்படும் வன்முறையை தடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பணிபுரியும் இடம் பாதுகாப்பானதாக அமைய வழிவகுக்கும். அது மட்டும் இல்லாமல் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளின் உரிமையும் பாதுகாக்கப்படும் என்று அவர் மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.