ஜெய்ப்பூர் :லஞ்சம் வாங்கிய புகாரில் கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூர் பெண் மேயர் முனேஷ் குர்ஜார், பதவியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரின் மேயராக இருப்பவர், முனேஷ் குர்ஜார்; காங்கிரசைச் சேர்ந்தவர். இவரது கணவர், சுஷில் குர்ஜார்.
சமீபத்தில், நிலம் குத்தகைக்கு விடுவதில், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், சுஷில் குர்ஜார் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில், 40 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த ஊழலில், ஜெய்ப்பூர் மேயர் முனேஷ் குர்ஜாருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று, ஜெய்ப்பூர் மேயர் பதவியில் இருந்து, முனேஷ் குர்ஜாரை சஸ்பெண்ட் செய்து, ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘இந்த வழக்கில் முனேஷ் குர்ஜாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், விசாரணை முடியும் வரை, மேயர் பதவியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் முனேஷ் குர்ஜார் கூறுகையில், ”எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எதிராக அரசியல் சதி நடக்கிறது. இதை செய்தவர்கள் ஒரு நாள் சிக்குவர். நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement