பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலை நள்ளிரவில் திடீர் அகற்றம்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகரில் பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் நேற்று நள்ளிரவு திடீரென அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட பாஜக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்துக்குள் நேற்று மாலை பாரத மாதா சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதை அறிந்த வருவாய்த் துறையினர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து பாஜக கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அலுவலக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற மாட்டோம் என பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். அதையடுத்து சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார், விருதுநகர் வட்டாட்சியர் பாஸ்கரன், கூடுதல் எஸ்.பி. அசோகன், டிஎஸ்பி பவித்ரா ஆகியோர் பாஜகவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, தனியார் இடமாக இருந்தாலும் அந்த இடத்துக்குள் அரசு அனுமதி இல்லாமல் எந்த ஒரு சிலையும் அமைக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளதை சுட்டிக்காட்டினர். அதிகாரிகளிடம் கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளர் பொன் பலகணபதி மற்றும் பாஜகவினர் பேசுகையில், சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சிலை அமைப்பதற்காக மனு அளிப்பதாகவும் அதை உடனடியாக வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து அதிகாரிகள் மற்றும் பாஜகவினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் பாஜக அலுவலக வளாகத்துக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு நிறுவப்பட்டிருந்த பாரத மாதா சிலையை அகற்றி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்த பாஜகவினர் ஏராளமாக திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சர்ச்சை சம்பவம் தொடர்பாக விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.