"மு.க. ஸ்டாலினுக்கு இனி தூக்கமே இருக்காது".. ஆட்டமே இனிதான் இருக்கு.. ஜெயக்குமார் மிரட்டல் பேச்சு

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், இனி முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது சகாக்களுக்கும் தூக்கமே இருக்காது என்றும், இனிதான் ஆட்டமே ஆரம்பித்திருக்கிறது எனவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அமலாக்கத்துறை நேற்று காவலில் எடுத்துச் சென்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்தறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது வீடுகள் மற்றும் அலுவலங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவரிடம் கேட்க 600 கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதுதான் செந்தில் பாலாஜி விஷயத்திலும் நடந்துள்ளது. இதுவரை அமைச்சர், ஆளுங்கட்சி என்ற பாதுகாப்பு வளையத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டி கொண்டிருந்தார்கள். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் யார் யாரெல்லாம் மாட்டுவார்களோ அவர்கள் எல்லாம், அமலாக்கத்துறை வளையத்திற்குள் அவர் சென்றுவிடக் கூடாது என்பதற்காக பல நாடகங்களை அரங்கேற்றினார்கள்.

ஆனால் சரியான தீர்ப்பை நீதமன்றம் வழங்கியிருப்பதால், இப்போது செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வரப் போகின்றன. தன்னை தூங்கவிடாமல் திமுகவினர் செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை கூறினாரே நினைவிருக்கிறதா? இனிமேல் ஸ்டாலினுக்கும், அவரை சாந்தவர்களுக்கும் தூக்கமே இருக்காது. இனிமேல்தான் ஆட்டமே ஆரம்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி விஷயம் மட்டுமல்ல.. ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு ஸ்டாலின் குடும்பம் பதுக்கல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறது என பிடிஆர் பேசிய ஆடியோவையும் அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை விசாரணை செய்வார்கள். இதனால் பல மர்மங்கள் வெளிவரப்போகின்றன. தூக்கம் இல்லாத இரவுகளாகதான் இனி ஸ்டாலினுக்கு இருக்கப் போகிறது என ஜெயக்குமார் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.