சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. நிறை புத்தரிசி பூஜைக்காக தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்கள்!

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். விவசாய செழிப்பின் அடையாளமாக இந்த நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை 10 ஆம் தேதியான நாளை காலை நடைபெறுகிறது.

நிறை புத்தரிசி பூஜைக்கான நாள் மற்றும் நேரம் திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, இங்கிருந்து கிடைத்த நேரப்படி சபரிமலையில் நாளை காலை 5:45 மணி முதல் 6:15 மணி வரை நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

தந்திரி (தலைமை அர்ச்சகர்) கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமையில் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) என் பரமேஸ்வரன் நம்பூதிரி மாலை 5 மணிக்கு கோயில் கருவறையைத் திறந்து தீபம் ஏற்றினார். நிறை புத்தரிசி பூஜைக்கான நெற்கதிர் கட்டுகள் அச்சன்கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. பட்டு வஸ்திரம் சுற்றப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள், அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டி ஆகியவற்றை ரத வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இந்த நெற்கதிர்கள் இன்று மாலை 3 மணியளவில் பம்பை கணபதி கோவிலில் பூஜை செய்யப்பட்டு பின்பு 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுகளும் சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அவற்றை பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவசம்போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாளை காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை பாரம்பரிய முறைப்படி நிறை புத்தரிசி பூஜை நடைபெறும்.

அதன்பிறகு பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். நிறை புத்தரிசி பூஜைக்காக தமிழ்நாட்டின் ராஜபாளையம், கூடங்குளம், கொரேணாச்சபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் நெற்கதிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.

நிறை புத்தரிசி பூஜைக்காக தர்ம சாஸ்தாவுக்கு சமர்பிக்கப்படும் புனித நெற்கதிர்களை ஏந்தி தமிழகத்தின் ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரைக்கு கல்லெலி உரலி அப்புப்பன் காவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறை புத்தரிசி பூஜைக்கு பின்பு இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளை தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும். பின்னர் மாதாந்திர பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.