"செங்கோல் சுக்குநூறாக தகர்ந்த கதை மோடிக்கு தெரியுமா..?".. திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்

டெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக கருத்து தெரிவித்தார். தமிழ்நாட்டின் வரலாறு மோடிக்கு தெரியுமா என்றும், செங்கோல் தகர்ந்த கதையை மோடி கேள்விப்பட்டதுண்டா எனவும் கனிமொழி கேள்வியெழுப்பினார்.

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அண்மையில் காங்கிரஸ் கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் அது இரட்டை என்ஜின் (டபுள் இன்ஜின்) ஆட்சி எனக் கூறுவது பாஜகவின் வழக்கம். அப்படிதான் மணிப்பூரிலும் அவர்கள் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அந்த இரட்டை என்ஜின் தற்போது இரட்டை பேரிடராக மாறிவிட்டது. மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கானோர் வேறு மாநிலங்களுக்கு ஓடுகிறார்கள். பெண்கள் தினம் தினம் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.

இத்தனை அராஜகங்கள் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்து கேட்டால் மணிப்பூர் பாஜக முதல்வர் என்ன சொல்கிறார் தெரியுமா? சகோதரர்களுக்கு இடையே சண்டை நடைபெறுகிறது.. நாங்கள் தந்தை ஸ்தானத்தில் இருந்து சமாதானம் செய்து வருகிறோம் எனக் கூறுகிறார். இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்?

மணிப்பூரில் இரண்டு இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்து வரப்பட்டதை டபுள் இன்ஜின் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. மகாபாரதத்தில் திரெளபதிக்கு அரச சபையில் வைத்து நடந்த அவமானத்தை பற்றி நாம் அறிவோம். அவரது ஆடை அனைவரின் முன்னிலையிலும் அவிழ்க்கப்பட்டது. அதேபோல்தான், மணிப்பூரிலும் அந்த இரண்டு பெண்களுக்கு நடந்திருக்கிறது. அந்தப் பெண்களும் தங்கள் மானத்தை காப்பாற்ற எந்த கடவுளையாவது வேண்டி இருப்பார்கள். ஆனால் அவர்களை பாதுகாக்க கடவுளும் வரவில்லை.. அரசும் வரவில்லை. மகாபாரதத்தை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். யார் திரெளபதியின் ஆடையை உருவினார்களோ அவர்கள் மட்டும் தண்டிக்கப்படவில்லை. அதை மரம் போல அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.

நீங்கள் (மோடி) புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி இருக்கிறீர்கள். அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொல்கிறீர்கள். உங்களுக்கு தமிழ்நாடு வரலாறு சரியாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் வரலாறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாண்டியன் செங்கோல் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? மக்களுக்கு சரியாக நீதி வழங்காததால் பாண்டியனின் செங்கோல் சுக்குநூறாக தகர்ந்தது. கண்ணகி கதையை படித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தியை எங்கள் மீது திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரம் படியுங்கள். இவ்வாறு கனிமொழி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.