புதுடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கவலைப்பட தேவையில்லை. கடைசி பந்தில் நாம் (பாஜக எம்பிக்கள்) சிக்சர் அடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று எம்பிக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இண்டியா கூட்டணியில் அவநம்பிக்கை நிலவுகிறது. தங்களோடு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதை நமக்கான வாய்ப்பாக கருத வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கவலைப்பட தேவையில்லை. நாம் (பாஜக எம்பிக்கள்) கடைசி பந்தில் சிக்சர் அடிப்போம்.
ஊழல் இல்லாத இந்தியா, வாரிசு அரசியல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. இதற்கு நேர்மாறாக இண்டியா கூட்டணியின் தலைவர்கள் ஆணவ போக்குடன் செயல்படுகின்றனர்.
அந்த கூட்டணியின் தலைவர்கள் சமூக நீதி குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வாக்கு வங்கி அரசியல், ஊழல் அரசியல், வாரிசு அரசியலில் ஈடுபட்டு வரும் அவர்களால் சமூக நீதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு (திருத்த) மசோதா கடந்த 3-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு குறித்து சிலர் கூறும்போது, வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி போட்டி என்று வர்ணித்தனர்.
இந்த அரையிறுதி போட்டியில் பாஜக கூட்டணி மிக எளிதாக வெற்றி பெற்றது. மாநிலங்களவையில் 131 எம்பிக்களின் ஆதரவுடன் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.