வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், 2022 ஜூலை முதல் கடந்த ஜூலை வரையிலான காலத்தில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
வட கிழக்கு மாநில மான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022 ஜூலை – கடந்த ஜூலை வரையிலான ஓராண்டில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மணிப்பூரில், மே மாதத்தில் கலவரம் துவங்கியதில் இருந்து, இந்தியா – மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லையிலும், மாநிலத்திலும் பாதுகாப்புப் படை வீரர்கள் முழு நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியின் போது, போதைப் பொருள் கடத்தல்காரர்களை அசாம் ரைபிள்ஸ் படையினர் பிடிக்கின்றனர். இதன்படி, 2022 ஜூலை – கடந்த ஜூலை வரை ஓராண்டில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, அவர்கள் கைப்பற்றி உள்ளனர். இதே போல், 2020 – 21ல், 1,200 கோடி ரூபாய்; 2021 – 22ல், 850 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாரபட்சமின்றி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

திரும்ப பெறப்பட்ட படை
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் லம்காய் சோதனைச் சாவடியில், அசாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை திரும்பப் பெறக் கோரி, ஏராளமான பெண்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மொய்ராங் லம்காய் சோதனைச் சாவடியில் இருந்து, அசாம் ரைபிள்ஸ் படையினர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், அங்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று மணிப்பூர் காவல் துறை தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement