Suriya: "எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவர் நீங்கள்தான்!"- சித்திக் இழப்பு குறித்து சூர்யா உருக்கம்

தமிழில் `ப்ரண்ட்ஸ்’, `எங்கள் அண்ணா’, `காவலன்’, `சாது மிரண்டா’, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் சித்திக் நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.

இதையடுத்து அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவருடன் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்து தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படம் விஜய்க்கு மட்டுமல்ல, கதாநாயகனாக உருவாகி வந்த சூர்யாவிற்கும் ஒரு நல்ல கம்பேக்காக அமைந்தது.

இந்நிலையில் சித்திக்கின் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி உருக்கமான பதிவு ஒன்றைத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

அதில், “சித்திக் சாரின் மறைவு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. அவரது நினைவுகள் என் இதயத்தைக் கனமாக்குகின்றன. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய கரியரில் ‘ப்ரண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். என் நடிப்பையும், என்னையும் புரிந்துகொண்டு என் மீது அளவற்ற அன்புடன் சின்ன சின்ன விஷயங்களைக்கூடக் கவனத்து அதை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பார். சீரியஸாக இல்லாமல் நகைச்சுவையுடன் நான் முதல் முறையாக மிகவும் சிரித்து மகிழ்ந்தது அவரது படப்பிடிப்பின்போதுதான்.

அப்போதே அவர் மதிக்கத்தக்க முன்னணி இயக்குநராக இருந்தார். இருப்பினும், அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் எல்லோரிடமும் சமமாக நட்பாகப் பழகுவார். படப்பிடிப்பில் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவருடன் பணியாற்றிய அந்தத் தருணங்கள் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத தருணங்கள். என் திறமையையும், என் தன்னம்பிக்கையையும் உணரச் செய்தவர் அவரே.

ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா

அவரை நான் எப்போது சந்தித்தாலும் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்பார். குறிப்பாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா என்பதைப் பற்றியும் விசாரிப்பார்.

நான் ஒரு நடிகராக வளர்ந்து வந்தபோது என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தினருக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். என்றென்றும் உங்களின் நினைவுகளுடன் பயணிப்போம். மிஸ் யூ லாட் சார்!” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.