மதுரை: ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 16-ல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் அன்னாதானம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆடி அமாவாசையின் போது லட்சணக்கான மக்கள் வருகை தருவர். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து மலை மேல் அமைந்திருக்கும் கோயிலுக்கு சென்றடைய வேண்டும்.
வனப்பகுதிக்குள் கோயில் அமைந்திருப்பதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மடங்களில் அன்னதானம் வழங்க தடை விதித்து, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு ஆடி அமாவாசையை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் ஆக. 14 முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மலைப் பகுதியில் தனியார் மடங்களில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டு கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மடங்களில் அசைவ உணவு சமைக்கின்றனர். நன்கொடை வசூலிக்கின்றனர். விளம்பரம் செய்கின்றனர். வனப்பகுதியை மாசுபடுத்துகின்றனர். இதனால் அன்னதானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து 7 கி.மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பக்தர்கள் ஒவ்வொருவரும் குடிநீர், உணவு கொண்டுச் செல்ல முடியாது. எனவே பக்தர்களின் நலன் கருதி ஆடி அமாவாசை நாட்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இந்து மதத்தின் ஒரு அங்கம். புனிதமான காரியமும் கூட. அப்படியிருக்கும் போது அன்னதான மடங்கள் செயல்பட அனுமதி மறுப்பது ஏன்? அன்னதானம் வழங்குவதை ஏன் முறைப்படுத்தக்கூடாது? கோயில் விழாக்கள் பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டும். எனவே, ஆடி அமாவாசையை ஒட்டி மலையிலுள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஆக. 16-ல் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு நிபந்தனையடன் அன்னதானம் வழங்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.