"கறைபடிந்த கைகள், ஜனநாயக மரபு மீறல், கட்சி அரசியலில் கவனம் செலுத்துபவர்கள்..” – வெளிநடப்பை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள்

புதுடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டு பிரதமர் பதிலுரை வழங்குகையில் வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பாஜக எம்.பி.க்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பை பாஜக எம்.பிக்கள் பலரும் கடுமையாக சாடியுள்ளனர்.

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில், “காங்கிரஸின் கரங்கள் ரத்தத்தால் தோய்ந்துள்ளது. இது ஜனநாயகத்தின் படுகொலை. அவர்களிடம் பதில் இல்லையே. அவர்கள் வேறு என்ன செய்வார்கள்” என்றார்.

பாஜக எம்.பி. ஜோதிராதிய சிந்தியா கூறுகையில், “எதிர்க்கட்சிகளுக்கு ஒரே எண்ண அலைதான். அவர்களுக்கு ஒரே கொள்கைதான். அவர்களைப் பொறுத்தவரை நாட்டைவிட கட்சிதான் முக்கியம்” என்றார்.

எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு பற்றி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி அற்புதமான உரையை நிகழ்த்தினார். அவர் எதிர்ப்பு கட்சிகள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கொடுத்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினரோ ஜனநாயக மரபை மதிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளனர்.” என்றார்.

மத்திய அமைச்ச ஸ்மிருதி இரானி, “நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விரும்பாமல் அதை சூறையாட நினைப்பவர்களுக்கு பிரதமரின் பேச்சுக்கு செவி கொடுக்க இயலாது. பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை”எனத் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சியில் உள்ள எங்களின் சகாக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள். பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்றார்கள். பிரதமர் பேச வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் பிரதமரின் உரையைக் கேட்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. இந்த ஒட்டுமொத்த நாடும் அவர்களுக்கு அதிகாரமும், அரசியலும் தான் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டது. வெளிநடப்பு செய்ததன் மூலம் அவர்கள் தங்களை மக்களுக்கு அம்பலப்படுத்திக் கொண்டார்கள் என்று மத்திய அமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெளிநடப்பு குறித்து கேள்வி எழுப்ப முயற்சிக்க அவர், “என் கட்சி இது குறித்து விளக்கும். பிரதமர் மணிப்பூர் பிரச்சினை பற்றி பேசவே இல்லை” என்று கூறியது நினைவு கூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.