கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டமா? தமிழக அரசு அறிவித்துள்ள சூப்பர் சலுகை!

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர வந்தன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தன்னாட்சிக் கல்லூரிகள் பக்கமிருந்து எழுந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், “உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, மாதிரி பாடத்திட்டங்கள் (Model Syllabus) உருவாக்கப்பட்டன.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி

இந்நிலையில், மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப (Optional) முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.