கஹுலுய், அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி, 36 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் எட்டு தீவு நகரங்கள் இருக்கின்றன. இங்கு, இரண்டாவது பெரிய நகரமாக மவுய் உள்ளது.
இங்கு, இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத் தீ, மெல்ல மெல்ல நகர்ப்புற பகுதிகளுக்கும் பரவியது.
நடவடிக்கை
இதையடுத்து, அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
திரும்பும் இடமெல்லாம் வானுயர எழுந்துள்ள கரும்புகையால், மவுய் நகரமே புகை மண்டலமாக மாறியுள்ளது.
சாலைகள், குடியிருப்புகள், முக்கிய கட்டடங்கள் என பல பகுதிகள் தீயில் கருகியதால், அந்நகரமே உருக்குலைந்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில், 36 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தீயில் இருந்து தப்பிக்க நினைத்தவர்கள் பசிபிக் பெருங்கடலில் குதித்து தப்ப முயன்ற நிலையில், பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மவுய் நகரின் முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் அமெரிக்காவின் விமானப் படைகளும், கடலோர காவல் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தரை வழியாகவும் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால், மவுய் நகரில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இரங்கல்
உலக அளவில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம், அதீத வெப்பம், அதிக காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் உலர்ந்த தாவரங்கள் உள்ளிட்டவை காட்டுத் தீயின் பரவலுக்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துஉள்ளார்.
அவர் சார்பில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதகதியில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்