ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள `ஜெயிலர்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகமெங்கும் இன்று வெளியாகியிருக்கிறது. ஊட்டியில் உள்ள கணபதி திரையரங்கில் `ஜெயிலர்’ திரைப்படம் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் எனத் திரையரங்க நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று காலை முதலே கணபதி திரையரங்க வளாகத்தில் குவிந்த ரஜினி ரசிகர்கள், போஸ்டர்களை ஒட்டியும் ரஜினிகாந்த் உருவம் பதித்த தோரணங்களைக் கட்டியும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர். நிர்வாகப் பிரச்னை காரணமாக பிற்பகல் 3 மணிக்கு மேல் படம் திரையிடப்படும் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 3 மணி வரை காத்திருந்த நிலையில், நாளைதான் திரையிட முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள், “என் தலைவன் படம் ஓடாத இந்த தியேட்டர் இருக்கக்கூடாது. உடனடியாக சீல் வைக்க வேண்டும்” என தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சிலர் பேசுகையில், “நீலகிரியில் தற்போது மொத்தம் இரண்டு தியேட்டர்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் குறிப்பிட்ட தியேட்டரில் படம் வெளியாகும் என்று சொன்னதால்தான் வந்து காத்துக் கிடந்தோம். 1000 ரூபாய் கிடைக்கும் கூலி வேலையை விட்டுவிட்டு படத்திற்கு வந்திருக்கிறோம். இவர்களின் அலட்சியத்தால் நாங்கள்தான் ஏமாற்றத்தில் இருக்கிறோம்” என்றனர் ஆதங்கத்துடன்.

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த திரையரங்க நிர்வாகிகள், “தியேட்டர் நடத்துவதற்கான உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். நடப்பு ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம். அனுமதி கையெழுத்து கிடைக்க தாமதமாகி விட்டது. இதனால், திரைப்படத்தை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் உடனடியாக படத்தைத் திரையிடுவோம்” என தெரிவித்தனர்.