புதுச்சேரி, ; புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலக பணிகளை மேம்படுத்தும் வகையில், இ – ஆபீஸ், ஒருங்கிணைந்த தரவு மையம், பொதுப்பணித் துறை திட்ட செயல்பாடுகள் கண்டறியும் ஒருங்கிணைந்த அமைப்பு, ‘தோண்டுவதற்கு முன்பு அழையுங்கள்’ ஆகிய மென்பொருள்கள் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
இந்த மென்பொருட்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து, அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், ‘தொழில்நுட்பம் சார்ந்த புதுச்சேரியை கட்டமைத்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு லே ராயல் பார்க் ஹோட்டலில் நேற்று நடந்தது.
தகவல் தொழில்நுட்ப துறை செயலர் மணிகண்டன் வரவேற்றார். தலைமை செயலர் ராஜிவ் வர்மா நோக்கவுரையாற்றினார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி சிறப்புரையாற்றினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இ – ஆபீஸ்
புதுச்சேரியில் 5.25 கோடி ரூபாய் செலவில் மாநில இ – ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து துறைகள், சங்கம், தன்னாட்சி அமைப்புகள் இ – ஆபீஸ் திட்டத்தை செயல்படுத்த 10 ஆயிரம் பயணர் உரிமம் வாங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 33 துறைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாத காலத்திற்குள் பிற துறைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நேரம், பணம் சேமிக்கப்படும். விரைவாக முடிவெடுத்தல், செயலாக்கம் நடக்கும். வெளிப்படை தன்மை மற்றும் நம்பக தன்மை ஏற்படும்.
இதில் கோப்புகளில் டிஜிட்டல் கையொப்பம் இடலாம். கோப்புகள் உருவாக்கம், நகர்வு, இயக்கம், எங்கு உள்ளது என்பதை எளிதாக கண்டறிய முடியும். அலுவலக அதிகாரிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் கோப்புகளை மொபைல் போன், லேப்டாப்புகள் மூலம் பாதுகாப்பாக அணுக முடியும்.
தோண்டுவதற்கு முன்…
மொபைல் செயலி மற்றும் இணையதளம் என இருவழியில் கிடைக்கும் இந்த வசதி மூலம் தோண்டுவதின் மூலம் ஏற்படும் சேதங்களில் இருந்து உள்கட்டமைப்புகளை காப்பாற்றவும், தோண்டும் நிறுவனங்கள் மற்றும் நிலத்தடி பயன்பாட்டு சொத்து உரிமையாளர்களுக்கு இடையே சுமூகமான ஒருங்கிணைப்பை எளிதாக்குகிறது.
சோதனை ஓட்டம் அடிப்படையில், பொதுப்பணித் துறையின் ஒரு பிரிவில் செயல்படுத்தப்படுகிறது.
பின்பு அனைத்து பிரிவுகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்