ஆளுநர் ஆர்.என்.ரவி, 2 நாள்கள் பயணமாக திருவண்ணாமலைக்கு நேற்று வந்தார். தொடர்ந்து, இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்து கலந்துகொண்டிருக்கிறார். இதனிடையே, சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆளுநர் ரவி, ‘‘திருவண்ணாமலை, சிவபெருமானின் பூமி. சிவபெருமான் விருப்பமில்லாமல், இங்கு எதுவும் நடக்காது. சாதுக்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அது, மக்கள் அனைவரையும் ஆன்மிக ஆற்றல் உடையவர்களாக உருவாக்குவதுதான்.

சாதுக்களாகிய உங்கள் பணி கோயிலிலோ, ஆசிரமத்திலோ முடிந்து விடக் கூடாது. சமுதாயத்தில் பரந்து விரிய வேண்டும். பக்தர்களே, சிவன் உருவமாக கிரிவலம் வருகின்றனர். அந்த கிரிவலப் பாதையில், அசைவ உணவகம் இருப்பது, ஏற்க முடியாதது. கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதை சரிசெய்து தர முயல்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
‘‘ஆளுநரின் இந்தக் கருத்தின்படி, கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் வைக்க ஏற்கெனவே அனுமதிக் கிடையாதா அல்லது அது குறித்து ஏதேனும் சட்ட வரைமுறை வகுக்கப்பட்டிருக்கிறதா?’’ என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவைத் தொடர்புகொண்டு ‘பதில்’ கேட்டோம்.
அதற்கு அவர், அறநிலையத்துறை பெண் அதிகாரி மூலம் விதிமுறைகள் அடங்கிய சட்டத்திருத்த நகலை நமக்கு அனுப்பிவைத்து, அதிகாரியை விட்டே விளக்கம் கொடுத்தார். ‘‘குத்தகை விதிகளின்படி, அண்ணாமலையார் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்திலோ, மனையிலோ இந்து சமய உணர்வுகளுக்கு மாறான, மறுக்கத்தக்க வர்த்தகம் அல்லது வியாபாரம் போன்ற செயல்பாடுகளுக்கு திருக்கோயில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

குறிப்பாக, கோயிலுக்குச் சொந்தமான கடைகள், கட்டடங்களில் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை நடத்த வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக் கூடாது என்பது சட்டவிதிகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதேசமயம், கிரிவலப் பாதையிலுள்ள தனியார் கட்டடங்களில் செயல்படும் கடைகளில் இறைச்சி விற்பனை செய்தால், அதை எந்த வகையிலும் தடுக்க கோயில் நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. தனியார் கட்டடத்தில் அப்படி இயங்கும் அசைவ உணவகங்களை அகற்றச் சொல்லவோ, அப்புறப்படுத்தச் சொல்லவோ, விதிமுறைகள் திருத்தப்படவுமில்லை, வகுக்கப்படவுமில்லை. எனவே, ‘கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் இருக்கவே கூடாது’ என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க முடிகிறது’’ என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs