கோவை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

கோவை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினருடன் இன்று (ஆக. 12) கலந்துரையாடுகிறார்.
இதற்காக கோவை வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து கார் மூலமாக உதகை, கூடலூர் மார்க்கமாக கேரள மாநிலம் வயநாடுக்குச் செல்ல உள்ளார்.

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ராகுல்காந்தி. இந்நிலையில், மோடி சமூகத்தினர் குறித்து தவறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில் ராகுல் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அவரது தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ராகுல் எம்.பி. பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வயநாடு எம்.பி. பதவியை அவர் மீண்டும் பெற்றார். பின்னர் மக்களவையில் உரையாற்றினார்.

எம்.பி. பதவியை மீண்டும் பெற்றபின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று ராகுல் காந்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.