மடு திருத்தல திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி பல முன்னெற்பாடுகள்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திக் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2 ஆவது கூட்டம் அண்மையில் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக உரிய திணைக்களங்களின் உதவியோடு, மடு திருத்தலத்திற்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற தேவைகளை உரிய திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். இம்முறை திருவிழா திருப்பலியை திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட உள்ளது. ஏற்கனவே மடு திருத்தலத்தில் உள்ள விடுதிகள் எல்லாம் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

தற்காலிகமாக 500க்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் வருகை தந்துள்ளனர். மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மடு சந்திக்கான விசேட புகையிரத சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.