பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன் தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு, ‘‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 55.7703 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா 15.7993 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. எனவே மீதமுள்ள 37.9710 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்” என வலியுறுத்தியது. இதனை கர்நாடக அரசின் அதிகாரிகள் ஏற்காததால், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய எல்லா அணைகளும் நிரம்பி வழிந்தன. இந்த ஆண்டு குறைந்த மழைபொழிவால் இன்னும் நிரம்பாமல் இருக்கின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்தஇக்கட்டான நிலையில் நீர் பங்கீடுசெய்வது சிரமமான ஒன்றாகும். தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து நேற்று தமிழகத்துக்கு விநாடிக்கு 11 ஆயிரத்து 237 கன அடி நீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 264 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 352 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 250 கன அடிநீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 5 ஆயிரத்து 875 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 11 ஆயிரத்து 237 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு சோதனை நிலையத்தை கடந்து, மேட்டூர் அணையை நோக்கி பாய்கிறது.