திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் மலைப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி வந்தனர். இவர்கள் மாலை 4.30 மணிக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்லத்தொடங்கினர். இவர்கள் இரவு8 மணியளவில் லட்சுமி நரசிம்மர்கோயிலுக்கு அருகில் செல்லும்போது பெற்றோருக்கு சற்றுமுன் நடந்து சென்றுகொண்டிருந்த லக் ஷிதா (6) என்ற சிறுமியை காணவில்லை.
சிறுமியை பல இடங்களில் தேடிய அவர்கள் பிறகு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினரும் போலீஸாரும் சிறுமியைதேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலையில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடலை காயங்களுடன் மீட்டனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர ஆலோசனை: இந்நிலையில் நேற்று திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து தர்மாரெட்டி கூறியதாவது: சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை கொன்றது மிகவும் துயரத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஆதலால் இனி வரும் நாட்களில் அலிபிரி, வாரி மெட்டு ஆகிய இரு மலைப் பாதைகளையும் மதியம் 2 அல்லது 3 மணிக்குள்மூடிவிடலாமா? என ஆலோசிக்கிறோம். விரைவில் இதுகுறித்து தெரிவிக்கப்படும். லக்ஷிதா விவகாரத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் அவர் பெற்றோரை விட்டு தூரத்தில் தனியாக நடந்து செல்லும்போது கொடிய மிருகத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
கூட்டமாக செல்லுங்கள்: எனவே திருமலைக்கு குழந்தைகளுடன் நடந்து செல்வோர் அவர்களை தனியே விடக்கூடாது. எல்லோரும் கூட்டமாக செல்ல வேண்டும். இனி 100 பேர் கொண்ட கூட்டத்துடன் ஒரு பாதுகாவலரை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். மிருகங்கள் நடமாடும் பகுதிகளில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
அவர்கள் 10 மீட்டருக்கு ஒருவர் வீதம் அலிபிரி மற்றும் வாரி மெட்டு பாதையில் நிறுத்தப்படுவர். மேலும்500 கண்காணிப்பு கேமராக்கள்மலைப்பாதையில் பொருத்தப்படும். இவ்வாறு தர்மாரெட்டி தெரிவித்தார்.
ரூ.10 லட்சம் நிதியுதவி: சிறுத்தை தாக்கி உயிரிழந்த லக்ஷிதாவின் குடும்பத்தினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சமும் வனத்துறை சார்பில் ரூ. 5 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.
எதிர்கட்சியினர் கண்டனம்: சிறுமியை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் ஏழுமைலையான் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளன.
முந்தைய சம்பவங்களை தேவஸ்தானம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளவில்லை என ஆந்திர பாஜக செய்தித் தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
