புதுடில்லி:தலைநகர் டில்லியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை நாட்களை அறிவிக்க, கலால் துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
புதுடில்லி மாநகரில் மதுக் கடைகளுக்கு விடுமுறை நாட்கள் அறிவிக்க கலால் துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை, விடுமுறை நாட்கள் குறித்து, முதல்வருக்கு பரிந்துரை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் கலால் துறை அறிவித்து வந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லியில் இந்த மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, செப்டம்பர் மாதத்தில் 17 – ஜென்மாஷ்டமி, 28 – ஈத் பண்டிகை ஆகிய இருநாட்களுக்கும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கலால் துறையின் பரிந்துரைக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.
ஆனால், ஜூலை 28ம் தேதி நிதித் துறை வெளியிட்ட அறிவிப்பில், டில்லி அரசின் நிதித்துறை முதன்மைச் செயலரின், ஒப்புதலுடன் கலால் துறை ஆணையர் தன் அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுக்கடை விடுமுறை நாட்களை கலால் துறை ஆணையரே அறிவிக்கலாம் என கூறியுள்ளது.
டில்லி அரசின் கலால் துறை ஒவ்வொரு காலாண்டிலும் மதுக்கடைகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கிறது.
இந்த ஆண்டின் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மதுக்கடைகளுக்கான விடுமுறை நாட்கள் செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்