`ஆளுநர் ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது..!' – நீட் விலக்கு விவகாரத்தில் விளாசும் திமுக

ஒரு உயிர்கொல்லி நோயைப்போல ஒவ்வோர் ஆண்டும், மாணவர்களின் உயிரைக் கொண்டு(கொன்று)போகிறது நீட் தேர்வு. இரண்டு முறை நீட் தேர்வு எழுதி போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போனதால், 19 வயது மாணவன் ஜெகதீஸ்வரன் தற்கொலைசெய்துகொண்ட மறுநாளே… துக்கம் தாளாமல் அவரின் தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், இதயத்தை கணக்கச் செய்கிறது. ஒருபுறம் நீட் தேர்வால் தற்கொலைகள் தொடர்ந்துகொண்டிருக்க… மறுபுறம் `நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போடமாட்டேன்’ என ஆளுநர் ரவி பேசிக்கொண்டிருக்க, வழக்கம்போல `ஆளுநருக்கு எங்களின் கண்டனம்; நீட் தேர்வு ரத்துக்கான காலம் தொலைவில் இல்லை; 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்!’ எனக் கூறுகிறது தி.மு.க அரசு!

நீட் தேர்வு தந்தை, மகன் தற்கொலை

`கையெழுத்து போடமாட்டேன்’ – ஆளுநர் ரவி

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, கிண்டி ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தினார். அப்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவியின் தந்தை எழுந்து, “தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்?” என ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “நீட் விலக்குக்கு ஒப்புதலளிக்க மாட்டேன். ஏனெனில், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளியாக (Intellectually disabled) இருக்க நான் விரும்பவில்லை. மாணவர்கள் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதேசமயம் இது தொடர்பான மசோதா Concurrent List-ல் வருவதால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது என்னிடம் கொடுக்கப்பட்டால் ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒப்புதலளிக்க மாட்டேன்!” என அழுத்தமாகப் பதிலளித்தார். மேலும், `நீட் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அவசியமா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், “நீட் தேர்வுக்கு பயிற்சி தேவை என்பதெல்லாம் கட்டுக்கதை. எந்த பயிற்சியும் இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்கள்!” என்றார்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ரவி

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

`ஆளுநருக்கும் நீட் மசோதாவுக்கும் சம்பந்தமில்லை!’ – மா.சுப்பிரமணியன்

அதேபோல பத்திரிகையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விலக்கு பெற வேண்டும் என்பதில் முதல்வர் தீவிரமாக இருக்கிறார். அதற்காக நீட் தேர்வு விலக்கு மசோதா தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதுடன் திருப்பி அனுப்பினார். அதனால் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதால், வேறு வழியின்றி ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

மா.சுப்பிரமணியன்

குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அங்கிருந்து தமிழக சுகாதாரத்துறை, ஆயூஷ், கல்வித்துறைக்கு சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருக்கிறோம். அதனால் அந்த மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது. அவர் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட வேண்டிய அவசியமே கிடையாது. அதனால் அவர் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று பேசியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்!” என ஆளுநர்மீது குற்றம்சுமத்தியிருக்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து தி.மு.க தலைமைச் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, “நீட் விலக்கு மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப்படி எந்த உரிமையும் இல்லை! முதன்முறை அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு, இரண்டாவது முறையாகவும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பினால், அவர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி கையொப்பமிட்டாக வேண்டும் என்பதுதான் அதிகாரம். அதனால் அந்த மசோதாவை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். இனி குடியரசுத் தலைவர்தான் கையொப்பமிட வேண்டும். அவர் விளக்கம் கேட்கும்பட்சத்தில் நாங்கள் அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எனவே குடியரசுத் தலைவருக்குத்தான் இப்போது முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் இருக்கிறது. தவிர, ஆளுநர் ஆர்.என்.ரவி இனி ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது; பிடுங்கத் தேவையுமில்லை! ஒரு மாநில ஆளுநராக இருப்பவருக்கு அரசியலமைப்பு சட்டம் குறித்த அறிவு இருக்க வேண்டும்; ஆனால் ஆர்.என். ரவிக்கோ அறிவும் இல்லை; தெளிவும் இல்லை; ஆளுநருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும் இல்லை! முகமது பின் துக்ளக் படத்தில் நடித்த `சோ’… `நான் வைத்ததுதான் சட்டம்’ என்று வசனம் பேசிக்கொண்டே ஒரு உடல் மொழியில் நடந்து செல்வாரே, அதைப்போலத்தான் ஆளுநர் ரவி திரிந்துகொண்டிருக்கிறார். எல்லாம் தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் திட்டமிட்டு இப்படி செய்துகொண்டிருக்கிறார்!” என கடுமையாக விளாசித் தள்ளினார்.

`ஆளுநர் கல்நெஞ்சக்காரர்; பயிற்சி நிறுவனங்களின்‌ கைப்பாவை!’ – மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீட்‌ தேர்வு என்பது தனியார்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ லட்சக்கணக்கில்‌ பணம்‌ கட்டிப்‌ படித்தால்‌ வெற்றிபெறக்‌கூடிய தேர்வு முறையாக இருக்கிறது. அப்படிப் பணம்‌ கட்டிப் படிக்க முடியாதவர்கள்‌ தோற்றுப்‌ போகிறார்கள்‌. பணம்‌ கட்டி இரண்டு, மூன்று ஆண்டுகள்‌ படிக்கப் பணம்‌ வைத்திருப்பவர்களால்‌ வெற்றிபெற முடிகிறது. குறைவான மதிப்பெண்‌ எடுத்து நீட்‌ தேர்வில்‌ வெற்றி என்ற தகுதியைப்‌ பெற்றுவிட்டவர்களும்‌, பணம்‌ வைத்திருந்தால்‌ மருத்துவக்‌ கல்லூரியில்‌ சேர முடியும்‌ என்ற நிலைமை இருக்கிறது. இதை வைத்துப்‌ பார்க்கும்‌போது பணம்‌ படைத்தவர்களுக்கே மருத்துவக்‌ கல்வி என்ற நிலைமையை உருவாக்கிவிட்டார்கள்‌. அதை மீறி இதனுள்‌ நுழையும்‌ ஏழை எளிய – அரசுப் பள்ளி மாணவர்கள்‌ தமிழ்நாடு அரசால்‌ வழங்கப்படும்‌ 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால்‌ சேர்பவர்களாகவே இருக்கிறார்கள்‌. ஆனால்‌, இது எதுவும்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவிக்குத்‌ தெரியவில்லை. புரிந்துகொள்ள மறுக்கிறார்‌. அல்லது பயிற்சி நிறுவனங்களின்‌ கைப்பாவையாக அவர்‌ செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்‌ வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மேலும், `நீட்‌ விலக்கு மசோதாவுக்கு நான்‌ கையெழுத்துப்‌ போட மாட்டேன்‌’ என்று ஆளுநர்‌ சொல்லியிருப்பதைப்‌ பார்த்தால்‌ அவரது அறியாமைதான்‌ தெரிகிறது. அவரது கையெழுத்துக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை. அது குடியரசுத்‌ தலைவரிடம்‌தான்‌ நிற்கிறது. இந்தச்‌ சட்டத்தைப்‌ பொறுத்தவரையில்‌ அவருக்கு எந்த அதிகாரமும்‌ இல்லை. ஏதோ அதிகாரம்‌ இருப்பதைப்‌போல அவர்‌ காற்றில்‌ கம்பு சுற்றிக்‌கொண்டிருக்கிறார்‌. ஜெகதீஸ்வரன்‌ போன்ற எத்தனை உயிர்கள்‌ பலியானாலும்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி போன்றவர்களின்‌ இதயம்‌ கரையப்‌ போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின்‌ காலத்தில்‌ மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. இன்னும்‌ சில மாதங்களில்‌ நாங்கள்‌ ஏற்படுத்த நினைக்கும்‌ அரசியல்‌ மாற்றம்‌ நடக்கும்‌போது, நீட்‌ தடுப்புச்‌ சுவர்‌ பொலபொலவென உதிர்ந்து விழும்‌. கையெழுத்துப் போட மாட்டேன்‌ என்பவர்கள்‌ எல்லாம்‌ காணாமல்‌ போய்விடுவார்கள்‌. மாணவன்‌ ஜெகதீஸ்வரன்‌, அவரின் தந்தை செல்வசேகர்‌ ஆகிய இருவரது மரணமே, நீட்‌ பலிபீடத்தின்‌ இறுதி மரணமாக இருக்கட்டும்‌. அறிவுமிகு மாணவக்‌ கண்மணிகளே தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உயிரை மாய்த்துக்‌கொள்ளும்‌ சிந்தனை வேண்டாம்!”‌ என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.