மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் இருக்கும் சில்வாசா என்ற பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், கடந்த மார்ச் மாதம் கர்ப்பமானார். அவருக்கு ஜூலை 25-ம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
அவரை டாக்டர்கள் சோதித்தபோது, அவரது இதயத்தில் பெரிய துளை இருந்ததை கண்டறிந்தனர். உடனே வயிற்றில் இருக்கும் கருவை கலைத்துவிடுவது நல்லது என்றும், அக்கருவால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பெண் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் கடந்த 31-ம் தேதி சேர்க்கப்பட்டார்.

அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கருவை தொடர்ந்து வயிற்றில் வளரவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். கரு ஏற்கெனவே 24 வாரத்தை தாண்டி இருந்தது. 24 வாரத்தை தாண்டிய கருவை கலைப்பதாக இருந்தால் அதற்கு கோர்ட் ஒப்புதல் பெறுவது அவசியம். எனவே அப்பெண் மருத்துவ காரணங்களை காட்டி உடனே கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது கே.இ.எம் மருத்துவமனை டாக்டர்கள், அப்பெண்ணின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், ’பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தையை தொடர்ந்து வளர விட்டால் மனுதாரருக்கு பிரசவத்தின்போது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அதேசமயம் இப்போது கருவை கலைத்தாலும் மிகவும் ஆபத்துதான். இதற்கு மனுதாரரின் ஒப்புதல் மற்றும் அவரின் உறவினர்களின் ஒப்புதல் அவசியம்’ என்று டாக்டர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து தம்பதியின் ஒப்புதலை பெற்று 27 வார கருவை கலைக்கும்படி நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

கடந்த 8-ம் தேதி அப்பெண்ணிற்கு மருத்துவர்கள் கருக்கலைப்பை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில் அப்பெண்ணிற்கு குழந்தை உயிரோடு பிறந்தது. குழந்தையின் எடை 484 கிராம் இருந்தது. குழந்தை இப்போது அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக. டாக்டர்கள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மனுதாரர்கள் தலையிடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட பெண் முழுமையாக சிகிச்சை பெற்ற பிறகுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மும்பையில் கடந்த மூன்று மாதங்களில், பெண்களின் கருவை கலைக்க கோர்ட் உத்தரவிட்டு, கருக்கலைப்பின்போது 3 பெண்களுக்கு குழந்தைகள் உயிரோடு பிறந்திருக்கின்றன. கடந்த மே 18-ம் தேதி 15 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்தபோது குழந்தை உயிரோடு பிறந்தது. அக்குழந்தையை இப்போது மாநில அரசுதான் பராமரித்து வருகிறது.
இதே போன்று கடந்த ஜூலை 27-ம் தேதி சோலாப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணின் 30 வார கருவை கலைக்க கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இது போன்று, கருக்கலைப்பு செய்யப்படும்போது பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. சில பெண்கள் கருக்கலைப்பு மூலம் பிறக்கும் குழந்தைகளை நிராகரித்து விடுகின்றனர். அப்படி நிராகரிக்கப்படும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு மாநில அரசை சாரும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.